பிரதமர் மோடி செல்லும் வழியெல்லாம் கலை நிகழ்ச்சிகள் -அண்ணாமலை தகவல்


பிரதமர் மோடி செல்லும் வழியெல்லாம் கலை நிகழ்ச்சிகள் -அண்ணாமலை தகவல்
x

பிரதமர் மோடி செல்லும் வழியெல்லாம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகைதரும் போதெல்லாம் இங்கு ஒரு திருவிழா குதூகலம் கூடிவருகிறது. பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக சென்னைக்கு வருகைதரும் பிரதமரை வரவேற்பதற்காக சாலையின் இருபக்கமும், அன்பின் மிகுதியில் பொதுமக்களும், பா.ஜ.க. தொண்டர்களும் திரளாக நின்று வரவேற்க இருக்கிறார்கள்.

தங்கள் அன்புத் தலைவரை காண்பதற்காக, அதிலும் வேகமாக விரையும் பிரதமரின் வாகன வரிசையில், அவரை காணக்கிடைக்கும் நொடி நேர தரிசனத்துக்காக சாலையின் இருமருங்கிலும் நின்று வரவேற்க காத்திருக்கும் கட்சித் தொண்டர்களின் அன்புக்கு எல்லையே இல்லை.

வரவேற்பு

தமிழக மக்கள் மீது தனிப்பட்ட அன்பும், மரியாதையும், பாசமும் கொண்டிருக்கும் பிரதமருக்கு மரியாதை செலுத்தும்வகையில், பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பரதநாட்டியம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், மேளதாளங்கள் என்று பிரதமரின் வாகனம் செல்லும் பாதை எல்லாம் வண்ணக்கோலங்களாக, திசையெல்லாம் நடைபெறும் திருவிழாவாக, தமிழக மக்கள் மகத்தான வரவேற்பை அளிக்க காத்துக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக பா.ஜ.க.வின் ஒவ்வொரு அணி மற்றும் பிரிவின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என்று அனைவரும் வெற்றிகரமாய் இந்த வரவேற்பை நிகழ்த்திக் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story