மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள்
ராணிப்பேட்டையில் நடந்த மக்கள்குறைதீர்வு கூட்டத்தில், மாற்றுத்திறனாளுக்கு செயற்கை கால்களை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
ராணிப்பேட்டை,
குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில், நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, வீடுகள் வேண்டி, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் அளித்தனர்.
செயற்கை கால்கள்
மொத்தம் 243 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பேருக்கு தலா ரூ.98 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.
தாட்கோ மற்றும் இந்திய சிமெண்ட் கழகத்தோடு இணைந்து சிமெண்ட் முகவராகும் திட்டத்தின் கீழ் அன்வர்திக்கான் பேட்டையை சேர்ந்த அருண்குமரன் என்பவருக்கு ரூ.90 ஆயிரம் தாட்கோ மானியம் மற்றும் இந்தியன் வங்கி மின்னல் கிளை மூலம் ரூ.2 லட்சம் கடனுதவி ஆணையை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, துணை கலெக்டர் வள்ளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.