செயற்கை நீர்வீழ்ச்சி விவகாரம்: கோர்ட்டின் உத்தரவால் களத்தில் இறங்கிய அதிகாரிகள்...!
தென்காசி மாவட்டத்தில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இயற்கை நீர்வீழ்ச்சிகள் இருக்கும் நிலையில் ஒருசில விடுதிகள் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாகியுள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியார் விடுதிகளை உடனடியாக மூடுங்கள் என உத்தரவிட்டனர்.
மேலும் செயற்கை நீர்வீழ்ச்சி குறித்த அறிக்கைகளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு உள்ள செயற்கையான நீர்வீழ்ச்சிகள் குறித்து ஆய்வு நடத்த மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த வைகயில், குண்டாறு பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பான அறிக்கையை இவர்கள் மாவட்ட கலெக்டரிடம் சமர்பிப்பர்.
இந்த அறிக்கையை மாவட்ட கலெக்டர் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு அனுப்பிவைப்பார் என்று கூறப்படுகின்றது.