செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள்


செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள்
x

கார்பைட் கற்கள், எத்திலின் போன்ற ரசாயனங்களால் செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள் குறித்து வியாபாரி, அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடலூர்

முக்கனிகளில் முதன்மையானது மாங்கனி. அதன் இனிய சுவை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வாயில் எச்சில் ஊறச் செய்துவிடும்.

மருத்துவ குணம்

நமது உடலுக்கு முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.

இப்படிப்பட்ட சத்தும், சுவையும் மிகுந்த மாம்பழ சீசன் தொடங்கினால் போதும், ஒரு பிரச்சினையும் கூடவே சேர்ந்து வருகிறது. ரசாயனங்களால் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் தான் அந்த பிரச்சினைக்கு காரணம். குறுகிய காலத்தில் லாப நோக்கத்தில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்பனை அதிகரித்து வருவதால், மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிக்கவும், அதனை தடை செய்யவும் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கண்டுபிடிக்கும் வழிமுறை

எப்படி ரசாயன கற்கள் பயன்படுத்தப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிப்பது என்பது குறித்து கடலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி கூறியதாவது:-

நம்முடைய முன்னோர்கள் மாம்பழங்கள், வாழைப்பழம், சப்போட்டா, பப்பாளி போன்ற பழங்களை பழுக்க வைப்பதற்கு குடாப்பு முறையை பயன்படுத்தி பழுக்க வைத்தார்கள். ஆனால், சில வியாபாரிகள் உடனடியாக பழங்களைப் பழுக்க வைக்க வேண்டும் என்பதற்காக கால்சியம் கார்பைட் (கார்பைடு கல்) என்ற ரசாயன பொருளை பயன்படுத்தி பழுக்க வைத்தார்கள். அவ்வாறு பழுக்க வைப்பது முற்றிலும் தவறானது. அதன் விளைவாக இப்படி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், மந்தம், நாவில் நீர்வறட்சி, நீர்ச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு நோய்கள் வருகின்றன. தொடர்ந்து இப்படிப்பட்ட பழங்களை சாப்பிடுவதால் அல்சர் நோய்களை தாண்டி, புற்றுநோய்க்கும் ஆளாக வாய்ப்புள்ளது. எனவே மாம்பழங்களை வாங்கும்போது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது அவருடைய பழங்களை பறிமுதல் செய்து அழிப்பதோடு வழக்கும் தொடுப்பதற்கு வழிவகை உள்ளது. மேலும், செயற்கையாக பழங்களை பழுக்க வைப்பதற்கு எத்திலின் கேஸ் பயன்படுத்தி பழுக்க வைக்கலாம். அதுவும் பழங்களின் தன்மையைப் பொறுத்து தேவையை பொறுத்து 100 பி பி எம் அளவு வாயு வடிவில் அறையினுள் செலுத்தி பழுக்க வைக்க வேண்டும். எத்திலின் திரவம் கலந்த நீரில் முக்கி எடுப்பதோ, ஸ்பிரே மூலம் பழங்களை பழுக்க வைப்பதோ முறையற்ற செயல் ஆகும்.

புகார் அளிக்கலாம்

கால்சியம் கார்பைடு வைத்து பழுக்க வைத்தாலோ, முறையற்ற வகையில் பழங்களை பழுக்க வைத்தாலோ உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம். அதன் மூலமாக உணவு பாதுகாப்புத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும். மேலும் பொதுமக்கள் மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை வாங்குகிற போது அந்த பழம் முழுவதும் பழுத்திருக்கிறதா அல்லது பச்சை நிறத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சளாக மாறுகிறதா என்று பார்க்க வேண்டும். இயற்கையாக பழுக்கிற பழங்கள் பச்சையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சளாக மாறி வரும். ஆனால், ரசாயனங்களை கொண்டு பழுக்க வைக்கிற பழங்கள் உடனடியாக அனைத்து பகுதியும் காம்பு உள்பட மஞ்சளாக தெரியும்.

வாங்குபவர்கள் இவற்றைப் பார்த்து வாங்க வேண்டும். மேலும் மாம்பழத்தை நறுக்கும்போது பூ மாதிரி சதை கிழிந்தால் அது நல்ல பழம் ஆகும். நறநறவென்றோ, சதைப்பகுதியின் இறுதியில் வெள்ளை நிறத்திலோ இருந்தால் அது ரசாயனம் கொண்டு பழுக்க விடப்பட்ட மாம்பழங்கள் ஆகும். நல்ல மாம்பழங்களை தண்ணீரில் போட்டால் மூழ்கி விடும். ஆனால் செயற்கையாக பழுக்க விடப்பட்ட மாம்பழங்கள் மிதக்கும். கிராமப்புறங்களை போல நகர் பகுதிகளில் மாம்பழங்கள் பழுக்கவிடப்படும் புகை மூட்டும் பழக்கம் இல்லை. எனவே மக்கள் மாம்பழங்கள் வாங்கும்போது மிகவும் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். தேர்வு செய்து வாங்கும் மாம்பழங்களை அரிசி டப்பாவில் போட்டுகூட பழுக்க விடலாம்.

மேலும் ஆப்பிள் பழபழப்பாக இருந்தால், அதனை நகத்தால் சுரண்டி பார்க்க வேண்டும். அவ்வாறு சுரண்டும் போது மெழுகு வந்தால், அவை கெட்டுப்போகாமல் இருக்க மெழுகு தடவப்பட்டிருக்கும். அந்த பழங்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் வீட்டிற்குச் சென்ற பிறகு எல்லா பழங்களையும் நன்றாக கழுவி விட்டு சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

நடவடிக்கை இல்லை

ராமநத்தம் அறிவழகன்:- செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இதற்கு காரணம் அதிகாரிகள் யாரும் கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்காததே ஆகும். கடைகளில் ஆய்வு செய்யும் அதிகாரிகள், செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டதை கண்டறிந்தால் அவற்றை பறிமுதல் செய்கிறார்களே தவிர, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. இதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் ரசாயனங்கள் பயன்படுத்தியே பழங்களை பழுக்க வைக்கின்றனர். வெயில் காலம் வந்தாலே கொப்புளங்கள், கட்டிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. ஆனால் இந்த நோய் பிரச்சினைகளுக்கெல்லாம் ரசாயன கல் பழுக்கும் நடவடிக்கைகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனவே தமிழக அரசு, இதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மிகவும் அபாயம்

சிதம்பரம் உணவு பாதுகாப்பு அதிகாரி அருள்மொழி:- தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. வியாபாரிகள் மாம்பழங்களை இயற்கை முறையில் பழுக்க வைத்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். கால்சியம் கார்பைட் கல் மூலம் சில இடங்களில் மாம்பழங்களை வியாபாரிகள் பழுக்க வைக்கின்றனர். வினோ ஸ்பிரே கெமிக்கல் முறையிலும் பழுக்க வைக்கப்படுகிறது. இது மிகவும் அபாயகரமான ஒன்று. இதனால் மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று உபாதைகள், புற்றுநோய் வரை பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் இயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைக்க வேண்டும். இயற்கையாக பழுக்கும் மாம்பழங்களை தண்ணீரில் போட்டால் மூழ்கி விடும், செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்களை தண்ணீரில் போட்டால் மிதக்கும். செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களில் வாசனை இருக்காது. ருசியும் குறைவாக இருக்கும். பொதுமக்கள் இதன் மூலமே கண்டுபிடித்து விடலாம்.

பழத்தை பார்த்தால் பயம்

விருத்தாசலம் சீதா:- முன்பு உள்ள காலகட்டங்களில் மாம்பழம் இயற்கையான முறையில் பழுக்க வைத்து, வீட்டில் பாட்டி கொடுத்த நினைவுகள் இன்று வரை மறக்க முடியவில்லை. அன்று இருந்த மாம்பழத்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. மிகவும் ஆசையாக இருந்தது சாப்பிட வேண்டும் என்று. ஆனால் தற்போதுள்ள பழத்தை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது. காரணம் மாம்பழத்தை பழுக்க வைப்பதற்காக கார்பைட் கற்கள் மற்றும் எத்திலின் போன்ற ரசாயன கலவைகள் மூலம் பழுக்க வைத்து அதனை விற்பனை செய்கிறார்கள். அதை சாப்பிட்ட பின் இரண்டு நாள் கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதிலும் சிறு குழந்தைகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே நமது அரசு மூலம் மாம்பழத்தை உரிய முறையில் வழங்க வேண்டும். முக்கனியில் ஒன்றான மாம்பழம் இனிவரும் காலங்களில் வியாபாரத்திற்காக வியாபாரிகள் செய்யும் செயலை பார்த்து போகப் போக எட்டாத கனியாக மாறிவிடும் அபாய சூழ்நிலை உள்ளது.


Next Story