செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள்


செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள்
x

செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருச்சி

முக்கனிகளில் முதன்மையானது மாங்கனி. அதன் இனிய சுவை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வாயில் எச்சில் ஊறச் செய்துவிடும்.

மருத்துவக் குணம்

நமது உடலுக்கு முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.

இப்படிப்பட்ட சத்தும், சுவையும் மிகுந்த மாம்பழச் சீசன் தொடங்கினால் போதும், ஒரு பிரச்சினையும் கூடவே சேர்ந்து வருகிறது. ரசாயனங்களால் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் தான் அந்த பிரச்சினைக்கு காரணம். குறுகிய காலத்தில் லாப நோக்கத்தில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்பனை அதிகரித்து வருவதால், மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

மக்களுக்கு விழிப்புணர்வு தேவை

ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிக்கவும், அதனை தடை செய்யவும் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கண்டுபிடிக்கும் வழிமுறை

எப்படி ரசாயன கற்கள் பயன்படுத்தப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிப்பது என்பது குறித்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ரமேஷ்பாபு:- பொதுவாகவே மாம்பழங்கள் விளைச்சலின் போது ரசாயன மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. மார்க்கெட்டுக்கு வரும்போது எத்திலின் திரவங்களும் தெளிக்கப்படுகின்றன. எனவே தேர்வு செய்து வாங்கும் மாம்பழங்களை சுமார் 6 மணி நேரம் தண்ணீரில் போடலாம். முடிந்தவரை தோல் நீக்கி சாப்பிடலாம். கார்பைட் கற்கள் மற்றும் எத்திலின் திரவ துளிகள் கொண்டு மாம்பழங்கள் பழுக்க வைப்பது பெருகி வருகிறது. இப்படி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், மந்தம், நாவில் நீர்வறட்சி, நீர்ச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு நோய்கள் வருகின்றன. மாம்பழங்கள் இயற்கையான முறையில் பழுக்கும்போது, அடிப்பகுதியில் இருந்துதான் பழுக்கத் தொடங்கும். எனவே இயற்கையான முறையில் பழுத்த மாம்பழங்களின் காம்புப் பகுதி பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்காது. சில பகுதிகள் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் காணப்படும். ஆனால் கல் வைத்து பழுக்கப்பட்ட மாம்பழங்கள் அனைத்து மஞ்சள் நிறத்தில் காணப்படும். நல்ல மாம்பழங்களை தண்ணீரில் போட்டால் மூழ்கி விடும். ஆனால் செயற்கையாக பழுக்க விடப்பட்ட மாம்பழங்கள் மிதக்கும். மாம்பழங்கள் போல சப்போட்டா, பப்பாளி, போன்ற பழங்களும் இதுபோல ரசாயான கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்டு வருகின்றன. இது தடை செய்யப்பட்ட நடவடிக்கை ஆகும். இதுபோன்ற செயலில் ஈடுபடும் கடைக்காரர்களின் கடை உரிமம் ரத்து, நேரடி வழக்கு போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறோம். மாதிரிகளில் ரசாயனம் இருப்பது கண்டறிந்தால் கிரிமினல் வழக்காக அது மாற்றப்படும். 4 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் கிடைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

வயிற்றுப்போக்கு

ரசாயன கற்கள் கொண்டு மாம்பழங்கள் பழுக்க விடப்படும் செயல்களை தடை செய்யக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்களின் கருத்து வருமாறு:-

துறையூர் புதிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த குரு சர்மா சங்கர்:- துறையூரில் உள்ள முசிறி பிரிவு ரோடு, துறையூர் புறவழிச் சாலை துறையூர் பஸ் நிலையம், ஆத்தூர் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மாம்பழம் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. ஆனால் சிலர் மாங்காய்களை வாங்கி விரைவில் பழுக்க வேண்டும் என்பதற்காக கார்பைட் கற்கள் மற்றும் எத்திலீன் திரவ துளிகள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைக்கிறார்கள். இதனால் அதனை வாங்கி சாப்பிடுவோர்களுக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு உபாதைகளும், வாய்ப்புண், குடற்புண் போன்றவை ஏற்படுகிறது. இவற்றை உணவுத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் இதுபோன்று கற்கள் வைத்து பழுக்க வைக்கும் மாம்பழங்களை கண்டுபிடித்து அழிக்க வேண்டும். இத்தகைய வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிக்கடி சோதனை

துவரங்குறிச்சி சேர்ந்த சரவணன்-பிரியா தம்பதி:- செயற்கையாக பழுக்க வைக்கும் மாம்பழங்கள் குழந்தைகள், பெரியோர்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சாப்பிட்டால் வயிற்று வலி போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எனவே செயற்கையாக பழுக்க வைக்கும் மாம்பழங்களை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் மொத்த விற்பனை கூடங்களை அடிக்கடி சோதனை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரமாக...

தா.பேட்டையை சேர்ந்த இல்லத்தரசி மீனா:- சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய முக்கனிகளில் முதன்மையான மாம்பழத்தில் 100-க்கும் அதிகமான வகைகள் உள்ளன. இந்த மாம்பழத்தில் வைட்டமின் ஊட்டச்சத்துகள் உள்ளது. தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பதற்கு வியாபாரிகள் ரசாயனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாம்பழங்களை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தள்ளுவண்டி, சாலையோர கடைகள், சந்தைகள் என அனைத்து இடங்களிலும் விற்கப்படும் மாம்பழம் தரமாக உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. தோட்டத்தில் இருந்து பறித்துவரும் மாம்பழங்களை வியாபாரிகள் சீக்கிரம் விற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாளுகின்றனர். இதுபோன்று விற்கப்படும் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயற்கை முறையில் பழுக்க வைப்பதில்லை

திருச்சி மத்திய பஸ் நிலைய பகுதியில் பழ வியாபாரம் செய்து வரும் வியாபாரி ரத்தினம்:-

ஆண்டு தோறும் மாம்பழ சீசன் வரும் போது மாம்பழத்தை செயற்கை முறையில் பழுக்க வைக்கிறோம் என்ற கருத்து நிலவுகிறது. கொரோனா காலகட்டத்தில் மாநகராட்சி சுகாதார துறை சார்பில் மாம்பழத்தை செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக கூறி வியாபாரிகளிடம் இருந்து டன் கணக்கில் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பழ வியாபாரிகள் அனைவரும் செயற்கை முறையில் மாம்பழத்தை பழுக்க வைப்பதில்லை. மாறாக பிற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள பழங்கள் பழுக்க வைக்கும் நடவடிக்கைகளை தான் நாங்கள் கையாளுகிறோம். திருச்சியில் துவரங்குறிச்சி, நத்தம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் வியாபாரத்திற்கு வருகிறது. இதில் பங்கனப்பள்ளி மாம்பழம் ரூ.50 இருந்து ரூ.80 வரை விற்பனை ஆகிறது செந்தூரம் ரூ.50 முதல் 60 வரையும், இமாம்பசந்த் ரூ.80 முதல் 100 வரையும், கல்லாமணி ரூ.50 முதல் 60 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செயற்கை முறையில் பழுக்க வைக்க கூடாது என்று மற்ற வியாபாரிகளுக்கும் அறிவுரை கூறி வருகிறோம். தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே மாம்பழங்களை நன்கு பார்த்து வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story