திருவாரூரில் கலைஞர் கோட்டம் நாளை திறப்பு


திருவாரூரில் கலைஞர் கோட்டம் நாளை திறப்பு
x

திருவாரூரில் கலைஞர் கோட்டம் நாளை திறக்கப்படுகிறது. விழாவில் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.

சென்னை,

கிண்டியில் 6 தளங்களும், 1,000 படுக்கைகளும் கொண்ட கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியை உங்களில் ஒருவனான நான் திறந்து வைத்தேன்.

தமிழ் வளர்த்த மாநகராம் மதுரையில் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக மிகப்பெரிய நூலகம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நூலகம் விரைவில் திறக்கப்பட்டு, இளைய தலைமுறைக்கான அறிவுக்கருவூலமாக செயல்படவிருக்கிறது.

ஓராண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கருணாநிதி புகழ் போற்றும் பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்ற முனைப்புடன் நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. 'கலைஞர் கோட்டம்' திறப்பு விழாவுக்காக தொண்டர்கள் அனைவரையும் அழைப்பதற்காக உங்களில் ஒருவனான நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

திருவாரூரில், கலைஞரின் அன்னையார் - எனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டு உள்ளது கலைஞர் கோட்டம்.

சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கியவர் கருணாநிதி. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ஒவ்வொரு கல்லும் அவர் பார்வைபட்டபிறகே, சிற்பி கணபதி ஸ்தபதி குழுவினரின் உளிகளால் வடிக்கப்பட்டன.

கலைஞரின் நெஞ்சமெல்லாம் நிறைந்த வள்ளுவர் கோட்டத்தை போலவே, திருவாரூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை நவீனத் தொழில்நுட்பத்துடன் ஓடச்செய்தவர் நம் தலைவர். அந்த திருவாரூரில், தேர் போன்ற வடிவில் அவருக்கு கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

அழைக்கிறேன்

கோட்டத்தில் அவரது சிலையை, அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தை - என் தாத்தா முத்துவேலரின் பெயரிலான நூலகம், இரண்டு திருமண மண்டபங்கள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம். மக்கள் நலன் காக்கவும் - மாநில உரிமைகளை மீட்கவும் கருணாநிதி வழியில் துணிந்து நடை போடுவோம் என்பதுதான் கோவையில் நடந்த கண்டன கூட்டம் விடுத்துள்ள செய்தி.

குறுக்கே வரும் தடைகளை தகர்த்து நம் பயணம் தொடர்கிறது. வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டே இருக்கும். நாளை திருவாரூரில் திறக்கப்படவுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன்.

நிதிஷ்குமார் திறந்துவைக்கிறார்

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தை திறந்துவைக்கிறார். பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தை திறந்து வைக்கிறார். தலைவரின் சிலையை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கிறேன்.

ஒவ்வொரு தொண்டரும் உணர்வாகவும், உயிராகவும் உள்ள நம் தலைவரின் பெயரில் உயர்ந்து நிற்கும் கோட்டத்தின் திறப்பு விழாவில் உங்கள் திருமுகம் காண காத்திருக்கிறேன். பகை வெல்லும் பட்டாளமாய் - அறம் காக்கும் அணிவகுப்பாய் திரண்டிடுவீர்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

1 More update

Next Story