கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் பதிவில் மாநில அளவில் தூத்துக்குடி 4-வது இடத்தை பிடித்தது
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் பதிவில் மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம் 4-வது இடத்தை பிடித்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் பதிவு செய்வதில் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் 4-வது இடத்தில் உள்ளது என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
விண்ணப்ப பதிவு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்வதற்காக ரேஷன் கடை பணியாளர்கள் மூலம், வீடு வீடாக விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 24-ந் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 980 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 600 ரேஷன் கடைக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் நடந்து வருகிறது.
ஆய்வு
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 133 இடங்களில் முகாம் நடக்கிறது. இந்த முகாம்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை ஆய்வு செய்தார். அப்போது, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளையும், முகாமில் செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார். விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாத மூதாட்டிகளுக்கு உதவி செய்வதற்காக தனியாக உதவி மையமும் அமைக்கப்பட்டு இருந்தது. அதனையும அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது, முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட உன்னதமான திட்டம் ஆகும். பெண்களின் வாழ்வாதாரத்துக்கும், உழைப்புக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்-அமைச்சர், இந்த திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. பயனாளிகளை தேர்வு செய்வதற்காக விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு முகாமிலும் காலை 30 பேர், மாலை 30 பேர் வீதம் பதிவு செய்து வருகின்றனர்.
4-வது இடம்
மாவட்டத்தில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 999 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 563 விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்யப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் நிரப்ப தெரியாத முதியவர்கள் வசதிக்காக உதவி மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் விண்ணப்பங்களை அவர்கள் நிரப்பிக் கொள்ளலாம். ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தேவை உள்ள பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெறுவார்கள். வருகிற 4-ந் தேதிக்குகள் 80 சதவீதம் பணிகளை முடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பம் பதிவு மற்றும் முன்னேற்றத்தை வைத்து கணக்கீடு செய்ததில், மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம் 4-வது இடத்தில் உள்ளது. சிலர் பொதுமக்களுக்கு இந்த தொகை கிடைக்காது என்று வதந்தி கிளப்புகிறார்கள். எதிர்க்கட்சியினர் பாராட்டமாட்டார்கள். வதந்தியை பரப்புகிறவர்கள் பரப்பத்தான் செய்வார்கள். வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தாசில்தார் பிரபாகரன், சிவில் சப்ளை தாசில்தார் ஜான்சன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.