சென்னை மாநகராட்சி பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: அமைச்சர் தொடங்கிவைத்தார்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
சென்னை,
பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பகுதிகளில் இந்த திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் தேனாம்பேட்டை மண்டலம், ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
பின்னர் பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பரந்தாமன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மா.சுப்பிரமணியன்-சேகர்பாபு
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில், கோடம்பாக்கம் மண்டலம், ரங்கபாஷ்யம் தெருவில் நடைபெற்ற விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தில்லை நாயகம், 2-வது தெருவில் உள்ள எவர்வின் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ஆ.வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, துணை மேயர் மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.