கலை விருதுகள் பெற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்


கலை விருதுகள் பெற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலை விருதுகள் பெற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு அரசு மாவட்ட கலை மன்றங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய ஆண்டுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலை புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வாளர்குழு விரைவில் கூட்டப்படவுள்ளது.

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மிக்கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறகலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

இதில் 18 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி விருதும், 51 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 66 வயதிற்குமேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படவுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயதுச்சான்று மற்றும் கலை தொடர்பான சான்றிதழ்களின் நகல்களுடன் வின்ணப்பிக்க வேண்டும். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்ட கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கக்கூடாது. விருது பெற தகுதிவாய்ந்த கலைஞர்கள் வருகிற 25-ந் தேதிக்குள் உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்ப்பட்டி, தஞ்சாவூர்- (613 403) என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story