ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவர் கைது


ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவர் கைது
x

கோப்புப்படம்

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆருத்ரா நிறுவனத்தின நிர்வாக இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜன், பேச்சிமுத்துராஜா, நடிகர் ரூசோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

61 இடங்களில் நடந்த சோதனையில் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு கோடியே 13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வங்கிக்கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் டெபாசிட், 103 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் முதல்கட்ட புலன் விசாரணை முடிக்கப்பட்டு, 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில், தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் என்பவரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை போரூரில் தீபக் பிரசாத் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சென்ற பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.

தற்போது சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து தீபக் பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபக் பிரசாத் நிர்வாக இயக்குனர் ராஜசேகர் என்பவரின் நெருங்கிய தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story