சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்


சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
x

சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.

அரியலூர்

அரியலூரில் உள்ள கைலாசநாதர் கோவில், குறிஞ்சான் குளக்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் ெரயில்வே கேட்டில் உள்ள காசி விசுவநாதர் கோவில் ஆகிய கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது. அருந்தவ நாயகி சமேத ஆலந்துறையார் கோவிலில் உள்ள ஆலந்துறையாருக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு உபசாரங்கள், தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை முதல் சிறப்பு தீபாராதனையுடன் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஓட்டக்கோவில், பொய்யாதநல்லூர் உள்ளிட்ட கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் திருமுறைகள், சிவபுராணம், நடராஜப் பத்து ஆகிய பதிகங்களை பாடி வழிபாடு செய்தனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

உடையார்பாளையம், ஆண்டிமடம்

உடையார்பாளையத்தில் உள்ள பயறணீஸ்வரர் கோவிலில் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு 16 வகையான மகா அபிஷேகமும் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. இதையடுத்து ராஜ வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சாமி வீதி உலா நடைபெற்றது. மாலையில் ஊடல் உற்சவம் நடந்தது. பின்னர் காண்டீப தீர்த்தம் ஏரியில் நடராஜர், சிவகாமி அம்மாள் மற்றும் சுந்தரர் ஆகியோருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டிமடம் விளந்தை கிராமத்தில் உள்ள மேல அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று விநாயகர், சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜர், மாணிக்கவாசகர் ஆகிய உற்சவர்களுக்கு பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிவகாமி அம்பாளுடன் நடராஜர் கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார். இதில் பக்தர்கள் திருவாசகம் படித்து, நமச்சிவாய கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.

ஐம்பொன் சிலைகள்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் உள்ள சோழீஸ்வரர் கோவிலுக்கு நேற்று முன்தினம் ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் பெருமாள் கோவிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து சோழீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 3 ஐம்பொன் சிலைகள் ஆருத்ரா தரிசனத்திற்காக கொண்டு வரப்பட்டன. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகிய 3 சிலைகளையும் கொண்டு வந்தனர். அந்த சிலைகள் நேற்று காலை ஆருத்ரா தரிசனத்திற்காக அலங்காரம் செய்யப்பட்டு, வாகனங்களில் வைத்து மேளதாளங்கள் முழங்க விக்கிரமங்கலத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக கொண்டு செல்லப்பட்டது. காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் பொதுமக்களின் தரிசனத்திற்காக கோவிலில் வைக்கப்பட்டது.

இதேபோல் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தானில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலுக்கு குருவாலப்பர் கோவில் அரசு பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகிய 3 ஐம்பொன் சிலைகளுக்கும் நேற்று முன்தினம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. நேற்று காலை சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்து வாகனங்களில் வைத்து ஸ்ரீபுரந்தானில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோவிலில் வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2 கோவில்களிலும் உள்ள ஐம்பொன் சிலைகளை இன்று(சனிக்கிழமை) இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் குருவாலப்பர் கோவில் அரசு பெட்டகத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்க உள்ளனர்.


Next Story