அரும்பாக்கம் வங்கி கொள்ளை: அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் பணியிடை நீக்கம்


அரும்பாக்கம் வங்கி கொள்ளை: அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் பணியிடை நீக்கம்
x

அரும்பாக்கம் கொள்ளை சம்பவத்தில் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் 3.7 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது.

சென்னை,

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த விவகாரம் தொடர்பாக அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் முழுவிவரம்:-

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் இயங்கி வரும் பெடரல் வங்கியின் நிதி சேவை மையத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த நகைகளில் 31.7 கிலோ தங்க நகைகள் கடந்த 13-ந்தேதி அன்று கொள்ளை போனது. கத்தி முனையில் ஊழியர்களை கட்டிப்போட்டு இந்த துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் இந்த வங்கி கிளையில் வேலை பார்த்த கொரட்டூரைச் சேர்ந்த முருகன் இந்த கொள்ளை திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.

அதனடிப்படையில் போலீசார் நடத்திய புலன் விசாரணையில், கொள்ளை கும்பலை சேர்ந்த வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்த சந்தோஷ், மண்ணடி தெருவை சேர்ந்த பாலாஜி, செந்தில்குமரன் ஆகிய 3 பேர் கொள்ளை சம்பவம் நடந்து முடிந்த 24 மணி நேரத்துக்குள் அதிரடியாக கைது செய்தனர்.

கொள்ளை கும்பல் தலைவனாக செயல்பட்ட முருகன் கடந்த 15-ந்தேதி கைது செய்யப்பட்டார். இவர்களிடமிருந்து ரூ.8.50 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 18 கிலோ தங்க நகைகளுடன் மாயமான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா கடந்த 16-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குண்டலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவரிடம் இந்த நகைகளை கொடுத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இளையராஜா வீட்டுக்கு சென்று 13.7 கிலோ தங்க நகைகளை தனிப்படை போலீசார் மீட்டனர். இளையராஜாவும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்.

போலீசார் விசாரணையில் சூர்யா கொள்ளையடித்த நகைகளை உருக்குவது தொடர்பாக கோவை மாவட்டம் வீரகேரளத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரின் உறவினரான ஸ்ரீவத்சவ் என்பவரிடம் பேரம் பேசியதும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ஸ்ரீவத்சவ்வும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடுத்தடுத்து கைது சம்பவங்கள் நடைபெற்று, கொள்ளை போனதாக கூறப்பட்ட 31.7 கிலோ மீட்கப்பட்டன.

இந்த வழக்கில் கைதான பாலாஜி, சந்தோஷ் ஆகிய 2 பேரை அரும்பாக்கம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது சந்தோஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ' தனது மனைவி ஜெயந்தியிடம் 3.7 கிலோ தங்க நகைகளை கொடுத்தேன். நாங்கள் போலீசில் சிக்கி விட்டாலோ, ஏதாவது பிரச்சினை என்றாலோ இந்த நகைகளை விற்று எங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறினேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து ஜெயந்தியை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், இந்த நகைகளை தனது உறவினரான செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் மனைவியிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார். அதன்பேரில் தனிப்படை போலீசார் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்திய நேரத்தில், அமல்ராஜே அந்த நகைகளை போலீசாரிடம் நேர்மையாக ஒப்படைப்பது போன்று கொடுத்துள்ளார்.

திருட்டு நகைகள் வீட்டில் இருப்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும் தகவல் தெரிவிக்காமல் போலீசார் நெருங்கியவுடன் ஒப்படைத்ததால் அவரும் இந்த கொள்ளை கும்பலாக ஆதரவாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரும் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், அவரது மனைவி இந்திரா, கொள்ளை வழக்கில் சிக்கிய சந்தோஷின் மனைவி ஜெயந்தி ஆகிய 3 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் போலீஸ் இன்பெக்டர் அமல்ராஜூக்கு இந்த கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரிய வரும்.

விசாரணையில் முடிவில் சந்தோஷின் மனைவி ஜெயந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் மனைவி இந்திரா ஆகிய 2 பேர் கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.


Next Story