ஆறுமுகநேரியில் 21 அம்மன் கோவில்கள் முன்பு விநாயகர் சிலை பிரதிஷ்டை


ஆறுமுகநேரியில் 21 அம்மன் கோவில்கள் முன்பு விநாயகர் சிலை பிரதிஷ்டை
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் 21 அம்மன் கோவில்கள் முன்பு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியிலுள்ள 21 அம்மன் கோவில்கள் முன்பு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகள் வருகிற 13-ந் தேதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருச்செந்தூர் கடலில் கரைகப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி

ஆறுமுகநேரி நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதை முன்னிட்டு அன்று மாலையில் ஆறுமுகநேரி சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் இருந்து 11 அடி உயர விநாயகர் சிலையை அலங்காரம் செய்து பக்தர்கள் புடை சூழ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. மெயின் பஜாரில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் அந்த விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஊர்வலத்தில் சிறுவர், சிறுமியர் சிலம்பம் ஆடியவாறு முன்செல்ல முக்கிய வீதிகள் வழியாக செந்தில் விநாயகர் கோவில் முன்பு சிலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ராமசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெகன், நகர பொறுப்பாளர்கள் பொன்ராஜ், சேகர், தியாகராஜன், விஜயபாஸ்கர் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் கசமுத்து, இந்து முன்னணி பொறுப்பாளர் வெங்கடேசன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அம்மன் கோவில்களில்...

நேற்று ஆறுமுகநேரிலுள்ள 21 அம்மன் கோவில்கள் முன்பு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காலையில் செந்தில் விநாயகர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். நாளை( செவ்வாய்க்கிழமை) நகரில் 21 அம்மன் கோவில்களில் இருந்து விநாயகர் சிலைகள் புறப்பட்டு செந்தில் விநாயகர் கோவில் வளாகத்திற்கு வந்து சேருகிறது. அங்கு இந்து முன்னணி சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

திருச்செந்தூர் கடலில்..

வருகிற 13-ந் தேதி காலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் அந்தந்த கோவில்களில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறும். பகலில் அன்னதானமும் அதனை தொடர்ந்து பகல் 2 மணிக்கு இந்து எழுச்சி பேரணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

மாலை 3 மணி அளவில் 11 அடி விநாயகர் முன்னே செல்ல 21 அம்மன் கோவில்கள் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளும், ஆறுமுகநேரி தலைவன்வடலி, குரும்பூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக ஆறுமுகநேரிக்கு கொண்டு வரப்படுகின்றன. அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சிலைகள் திருச்செந்தூர் கடலில் கரைக்கப்படும்.


Next Story