ஜெயலலிதா மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம்


ஜெயலலிதா மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம்
x

ஜெயலலிதா மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம் தமிழக அரசு அனுமதி.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது.

அதன்படி ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் என 157 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் ஆணையம் ஈடுபட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்த மருத்துவக்குழு ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இதுவரை எய்ம்ஸ் மருத்துவக்குழு தனது அறிக்கையை ஆணையத்துக்கு அளிக்கவில்லை.

இதற்கிடையே ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் அறிக்கை ஆணையத்துக்கு கிடைக்கப்பெறாததால் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 3 வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியது.

இதைத்தொடர்ந்து வருகிற 24-ந் தேதி வரை 3 வார காலம் அவகாசம் வழங்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.


Next Story