அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் சொத்துக்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் அனைத்து முக்கிய பகுதிகளிலும், பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் வடக்கு மண்டல ஐ.ஜி.தேன்மொழி பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வரும் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் நுழைவாயில் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் கோவிலுக்குள் வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.