பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்தது


பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்தது
x
திருப்பூர்


திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அமணலிங்கேஸ்வரர் கோவில்

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தகன்னிமார் மற்றும் நவகிரக சன்னதிகளும் உள்ளன.கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

பஞ்சலிங்க அருவி

மேலும் கோவிலுக்கு வருகின்ற வழியில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்தி அணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அவற்றை பார்வையிடவும் அணைப்பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும் மலைமீது உள்ள பஞ்சலிங்க அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கு உற்பத்தியாகின்ற ஆறுகள் நீர்வரத்தை இழந்து விட்டது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. இயற்கை நிறைந்த சில்லென்ற சுற்றுச்சூழலில் கண்கொள்ளாக் காட்சியில் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் இருந்த பஞ்சலிங்க அருவி பொழிவு இழந்து காணப்படுகிறது. இதனால் கோடை விடுமுறையின் இறுதியில் அருவியில் குளித்து மகிழலாம் என்ற உற்சாகத்தோடு திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து மும்மூர்த்திகளை தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைந்த அளவில் காணப்பட்டது. மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது.மழை தீவிரம் அடைந்து அருவிக்கு நீர்வரத்து ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் எழுந்து உள்ளது.

1 More update

Next Story