முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திப்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திப்பு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னையில் சந்தித்து பேசுகிறார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு கோருகிறார்.

சென்னை,

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இது பல்வேறு சம்பவங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது.

இந்தநிலையில், டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை சமீபத்தில் பிறப்பித்தது. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலான இந்த சட்டத்துக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து இருந்தன.

சந்திப்பு

மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (வியாழக்கிழமை) சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.

இதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் சண்டிகாரில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று மாலை 4 மணிக்கு சென்னை வந்தடைகிறார். இதேபோல பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் சென்னை வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை மாலை 4.30 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசுகிறார்.

சிறப்பு விமானம்

இந்த சந்திப்பின்போது, மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தின் பாதகம் குறித்தும், மத்திய அரசு ஒருதலைபட்சமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக்கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கேட்கிறார்.

மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பை முடித்துக்கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் சிறப்பு விமானம் மூலம் இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்றடைகின்றனர். அங்கு முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை நாளை (வெள்ளிக்கிழமை) சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story