ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி விசாரிப்பதால்வேங்கைவயல் சம்பவம் தொடர்புைடய மனுக்கள் தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி விசாரிப்பதால்வேங்கைவயல் சம்பவம் தொடர்புைடய மனுக்கள் தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி விசாரிப்பதால் வேங்கைவயல் சம்பவம் தொடர்புைடய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் என்னுடைய 2 மகன்கள், என் சகோதரியின் மகன் ஆகியோரை தொடர்புபடுத்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளன. இதனால் பள்ளி மாணவர்களான 3 பேரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது அவர்கள் 3 பேரும் பள்ளிக்கு செல்ல மறுக்கின்றனர். தவறான நோக்கத்துடன் நோட்டீஸ் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி வெள்ளனூர் போலீசில் புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் புகார் மனு மீதான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான விசாரணை முறையாக நடக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் நம்பிசெல்வன் ஆஜராகி, வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து, ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி, சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் சென்று கிராம மக்களிடம் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த சம்பவம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுவிட்டது. மனுதாரர் கோரிக்கையை ஒரு நபர் கமிஷனிடம் முறையிடலாம். அதேபோல ஒரு நபர் கமிஷன் அறிக்கையில் திருப்தி இல்லாதபட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராட்டம் நடத்த அனுமதி கேட்கலாம் என்று வாதாடினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story