நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன் - சசிகலா


நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன் - சசிகலா
x

அனைவரும் தி.மு.க.வை வீழ்த்த கைகோர்க்க வேண்டும் என சசிகலா கூறினார்.

சென்னை

மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் இன்று சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு கட்சியில் இரண்டு, மூன்று பேர் சேர்ந்து முடிவு எடுக்க முடியாது. அப்படி முடிவு எடுக்கும் கட்சி தி.மு.க.வாக இருக்கலாம். அ.தி.மு.க. மிகப் பெரியது. பா.ஜ.க. அலுவலகம் செல்லும் நிலையில் அ.தி.மு.க. இல்லை. இதைப் புரிந்துகொள்ள வேண்டியவர்கள், புரிந்துகொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்திப்பதற்கான முயற்சிகளை எடுத்து கொண்டு தான் உள்ளேன்.

அ.தி.மு.க. தொண்டர்களின் முடிவுதான் என்னுடைய முடிவு. தொண்டர்களின் குமுறலைப் பார்த்துக் கொண்டுள்ளேன். இரட்டை இல்லை சின்னத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது.நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன். சில பேரை எடை போட்டுக் கொண்டுள்ளேன். பொதுச் செயலாளர் பதவியை அளிக்கக் கூடிய இடத்தில் தொண்டர்கள் தான் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அ.தி.மு.க. இணைப்பு நடக்கும்.

தேர்தலின்போது 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று ஒரு பெட்டி நிறைய மனுக்களை வாங்கி, பூட்டி, சாவி என்னிடம் இருக்கும். ஆட்சிக்கு வந்ததும் இதனை திறந்து குறைகளை தீர்ப்பேன்' என்றார். ஆனால், இன்னும் அந்தப் பெட்டி திறக்கப்படவே இல்லை. ஒருவேளை சாவி தொலைந்து போய்விட்டது போல.

யாரையும் குறை சொல்ல முடியாது. நாம் என்ன கைக்குழந்தையா? நம்மை அவர்கள் கட்டுப்படுத்த. என் நிழலிடம் கூட யாராலும் நெருங்க முடியாது அனைவரும் தி.மு.க.வை வீழ்த்த கைகோர்க்க வேண்டும்" என்று சசிகலா கூறினார்.


Next Story