கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கொரோனா பரவல் இல்லை


கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு  தமிழகத்தில் கொரோனா பரவல் இல்லை
x

கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கொரோனா பரவல் இல்லை என்று கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கோயம்புத்தூர்


கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கொரோனா பரவல் இல்லை என்று கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சுகாதார நிலையம் திறப்பு

கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு விழா மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் ஆகியவை நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை சுகாதார இயக்குனர் அருணா வரவேற்றார்.

இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு துணை சுகாதார நிலையத்தை ரிப்பன் திறந்து வைத்ததுடன், கண்புரை பரிசோதனை, காசநோய் கண்காணிப்பு மற்றும் நடமாடும் கதிர்வீச்சு வாகனம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் ஆகியவற்றை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வருமுன்காப்போம் திட்டம்

வருமுன் காப்போம் திட்டம் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் 1,260 முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் 9 லட்சத்து 4,500 பேர் பயன்பெற்று உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 4 லட்சத்து 21 ஆயிரத்து 49 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். மேலும் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் பரிசோதனை வாகனம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சளி, இருமல் பரிசோதனை செய்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும்.

மேலும் இந்த முகாமில் கண்புரை பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டு, அதன் மூலம் புகைப்படம் எடுக்கும்போது கண்ணில் என்ன வகையான நோய் உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். உலகத்திலேயே தமிழகத்தில்தான் இந்த திட்டம் முதன்முதலாக தொடங்கப்பட்டு இருக்கிறது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 78 லட்சத்து 38 ஆயிரத்து 300 பேருக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் நமது நாட்டுக்கே முன்னோடியாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பரவல்

அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தை கடத்தப்படுவதை தடுக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு திட்ட மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் 22 என்ற எண்ணிக்கையில் இருந்து 2,700 என்று உயர்ந்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம்பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5 சதவீதம் பேர் தான் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். அத்துடன் தினமும் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது பரவும் கொரோனா வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

கட்டுப்பாடுகள் தேவையில்லை

ஒரு குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அனைவருக்கும் எளிதாக பரவி விடுகிறது. எனவே தான் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தினமும் எடுக்கப்படும் பரிசோதனையில் 10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு இருந்தாலோ, 40 சதவீதத்துக்கும் மேல் ஆஸ்பத்திரிகளில் தொற்று காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டால்தான் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.ஆனால் தற்போது அதுபோன்ற நிலை இல்லை. எனவே கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கொரோனா பரவலும் இல்லை.

எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரையில் தொடங்கப்பட்டு உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் இந்த ஆண்டில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்து வருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டிடங்கள் கட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு அது முடிவடையும் நிலையில் உள்ளது. டெண்டர் விடப்பட்டு 6 மாதத்துக்குள் கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கும்.மேலும் நாங்கள் டெல்லிக்கு சென்று மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திக்கும்போதெல்லாம் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story