அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல்


அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

திருப்பாச்சூர் கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திருப்பாச்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏன் வரவில்லை என கேட்டனர். அரசு அதிகாரிகள் வந்தால் தான் எங்களது குறைகளை தெரிவிக்க முடியும் என கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து திருவள்ளூர்-கடம்பத்தூர் நெடுஞ்சாலையான திருப்பாச்சூர் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் எங்களது குறைகளை கூற முடியவில்லை என்றும், எனவே அதிகாரிகள் கலந்து கொள்ள தயாரான பின்னர், மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரூபேஷ், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி, கழிவுநீர் அகற்றுதல், வீட்டுமனை பட்டா, விளையாட்டு மைதானம் போன்றவற்றை செய்து தரக்கோரி மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த வழியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருக்கண்டலம் ஊராட்சி

அதேபோல் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சி சிவன் கோவில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் கூறி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கடந்த கிராம சபை கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் நீண்ட நேரம் வாக்குவாதம் நிலவியது.

இருளர் இன மக்கள் வசிப்பிடத்தில் கூட்டம் நடத்த எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திற்குட்பட்ட அகூர் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று சுழற்சி முறையில் அகூர் ஊராட்சிக்கு உட்பட்ட இருளர் காலனி பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து அகூர் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு (கிராம ஊராட்சி), மகேஷ் பாபு ஆகியோர் இருதரப்பு மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து சமுதாய கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். சமுதாய கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை இருளர் இன மக்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இருளர் இன மக்கள் வசிக்கும் இடத்தில் கிராம சபை கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story