அரசு பஸ்சில் கண்டக்டர் பாலியல் சீண்டல் என18 மாணவிகள் புகார்
அரசு பஸ்சில் கண்டக்டர் பாலியல் ரீதியாக சீண்டுவதாக 18 மாணவிகள் திரண்டு வந்து அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
அரசு பஸ்சில் கண்டக்டர் பாலியல் ரீதியாக சீண்டுவதாக 18 மாணவிகள் திரண்டு வந்து அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
மாணவிகளிடம் சீண்டல்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவிகள், பி.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து பஸ் நிறுத்தம் வருவதற்கு பொதுப்பாதையில் நடந்து வந்தனர். இந்தநிலையில் அந்த பாதை தனி நபர் ஒருவரால் தடை செய்யப்பட்டதாகவும், இதனால் மாணவிகள் பஸ் நிறுத்தத்திற்கு வருவதற்கு சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அரசு பஸ்சில் பள்ளிக்கு வரும்போது பஸ் கண்டக்டர், மாணவிகளை அவதூறாக பேசுவதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், எனவே உரிய நடவடிக்கைக்கோரி 18 மாணவிகள் நேற்று விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர்.
மனு அளித்தனர்
பின்னர் இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரியிடம் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரி மனு கொடுத்தனர்.
இதுபற்றி முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், மாணவிகளின் புகார் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்போம். பொதுப்பாதையை தடை செய்துள்ள நபரின் மகளும் புகார் கொடுக்க வந்திருப்பது தெரியவந்தது. மாணவிகளை தனியாக ஒரு பஸ் மூலம் கல்வித்துறை ஊழியர்களுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாயத்து தலைவருக்கும், பள்ளி தலைமை ஆசிரியருக்கும் கல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது" என்று கூறினார்.