மூலவைகை ஆறு வறண்டதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


மூலவைகை ஆறு வறண்டதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
x
தினத்தந்தி 1 July 2023 6:45 PM GMT (Updated: 2 July 2023 11:42 AM GMT)

மூலவைகை ஆறு வறண்டதால் கடமலைக்குண்டு பகுதியில் உள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி

தேனி,

கடமலை-மயிலை ஒன்றியத்தில் 100-க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மூலவைகை ஆற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தொடர் மழையின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மூலவைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து காணப்பட்டது. இந்நிலையில் மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆற்றில் நீர்வரத்து இன்றி வறண்டது.

தொடர்ந்து கிராமங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உறை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கேரள மாநிலத்தின் அருகே அமைந்துள்ள கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தின் போது லேசான சாரல் மழை பெய்யும். சாரல் மழையின் போது ஆற்றில் நீர்வரத்து ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் கடமலைக்குண்டு பகுதியில் சாரல் மழை பெய்யவில்லை.

ஆனால் வெயிலின் தாக்கமே அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அடுத்ததாக தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை காலம் வரை தற்போது உறை கிணறுகளில் உள்ள குடிநீரை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட அதிகாரிகள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன்பு கிராமங்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் ஆய்வுகள் மேற்கொண்டு உறை கிணறுகளை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story