ஆலோசனை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால், வெளிநடப்பு செய்த நுகர்வோர் அமைப்பினர் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் ஆலோசனை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால், நுகர்வோர் அமைப்பினர் வெளிநடப்பு செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 3-வது காலாண்டிற்கான மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம் 26-ந்தேதி(அதாவது நேற்று) மாலை 4 மணியளவில் நடைபெறுவதாக நுகர்வோர் சங்க அமைப்பு நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்த 15 நிர்வாகிகள் நேற்று மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கிற்கு வந்திருந்தனர்.
இதேபோல் மாவட்ட சமூக பாதுகாப்பு தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் சுரேஷ் மற்றும் சில துறைகளை சேர்ந்த சில அலுவலர்கள் மட்டும் வந்திருந்தனர். ஆனால் உயர் அதிகாரிகள் மற்றும் பல துறைகளை சேர்ந்த அலுவலர்கள் வரவில்லை. இதனால், மாலை 6 மணி ஆகியும் கூட்டம் தொடங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நுகர்வோர் அமைப்பினர் அங்கிருந்த அதிகாரியிடம், எங்களுடைய குறைகளை கேட்க உயர் அதிகாரிகளும் இல்லை. அப்படியே குறைகளை சொன்னாலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை கூப்பிட்டு கேட்பதற்கு அலுவலர்களும் இல்லை. காலாண்டிற்கு ஒருமுறை நடக்கும் இந்த கூட்டத்திற்கு இப்படி அதிகாரிகள் வராமல் இருப்பது வேதனையாக உள்ளது, இதனால் நாங்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து அதிகாரிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றதால், கூட்டம் நடைபெறாமலேயே முடிவடைந்தது. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.