உடுமலையில் ரூ.30...உளுந்தூர்பேட்டையில் ரூ.80...
காய்கறிகள் விலை உயர்ந்து வரும் நிலையில் எல்லா ஊர்களிலும் சீரான விலை கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
போடிப்பட்டி
காய்கறிகள் விலை உயர்ந்து வரும் நிலையில் எல்லா ஊர்களிலும் சீரான விலை கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உள்ளூர் சந்தை
ஆண்டுப் பயிரான கரும்பு, வாழை போன்றவற்றை சாகுபடி செய்து விட்டு விலை கிடைக்குமா? லாபம் வருமா? என்று ஆண்டு முழுவதும் தவிக்கும் நிலை உள்ளது. இதனால் பல விவசாயிகள் குறுகிய காலத்தில் தொடர் வருமானம் தரும் வகையிலான காய்கறிகள் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆனால் சமீப காலங்களாக காய்கறிகள் சாகுபடியிலும் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது.குறிப்பாக, காய்கறிகளுக்கு சீரான விலை கிடைக்காததால் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் தக்காளி சாகுபடி விவசாயிகள் ஆண்டின் பெரும்பாலான காலங்களில் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் தக்காளியால் பல விவசாயிகள் ஏழைகளாக மாறியுள்ளனர்.
சிறப்புக் குழுக்கள்
கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை சீராக உயர்ந்து வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது. அதேநேரத்தில் விலை குறைவாக விற்பனையாகும் பகுதிகளிலிருந்து விளைபொருட்களை அதிக விலை விற்கும் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் வகையில் வேளாண் வணிகத்துறையினர் மூலம் சிறப்புக் குழுக்கள் அமைத்து செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பொதுவாக காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் முழுக்க முழுக்க உள்ளூர் சந்தைகளையே நம்பியிருக்கும் நிலை உள்ளது. உள்ளூரிலுள்ள கமிஷன் மண்டிகள் மூலம் வெளியூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் விலை நிலவரம் குறித்து அறியாமலேயே விற்பனை செய்ய வேண்டிய நிலை விவசாயிகளுக்கு உள்ளது. ஆனால் சில நேரங்களில் வெளியூர்களில் நல்ல விலைக்கு விற்பனையாகும் காய்கறிகள் உள்ளூரில் மிகக்குறைந்த விலைக்கு வாங்கப்படுகிறது. இதன்மூலம் கொள்ளை லாபம் பெறுபவர்கள் இடைத்தரகர்களாகவே உள்ளனர்.
முள்ளங்கி
உதாரணமாக நேற்று உடுமலை உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ. 25 முதல் ரூ. 30 வரை விற்கப்பட்ட முள்ளங்கி உளுந்தூர்பேட்டையில் ரூ. 80-க்கு விற்பனையாகியுள்ளது.ஒரு கிலோவுக்கு ரூ. 50 என்பது மிகப் பெரிய விலை வித்தியாசமாகும். அது அந்தந்த பகுதிகளின் விளைச்சல் மற்றும் வரத்தை அடிப்படையாகக்கொண்டு அமைகிறது. ஆனாலும் காய்கறிகளின் விலையை கணித்து வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் வகையிலான குழுக்களை அனைத்து பகுதிகளிலும் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன்மூலம் அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் சீரான விலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்'என்று பொதுமக்கள் கூறினர்.