சுடுகாட்டுக்கு இடம் இல்லாததால் இறந்தவர்கள் உடலை ரப்பர் படகில் ஆற்றை கடந்து சென்று அடக்கம்
சுடுகாட்டுக்கு இடம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ரப்பர் படகில் ஆற்றை கடந்து சென்று அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆவடியை அடுத்த பட்டாபிராம் அருகே உள்ள சோராஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுடுகாட்டுக்கு இடம் கேட்டு போராடி வருகின்றனர். ஆரம்ப காலத்தில் இறந்தவர்களின் உடல்களை கூவம் ஆற்றின் கரையிலேயே புதைத்தும், எரித்தும் வந்தனர்.
ஆனால் தற்போது அப்பகுதியில் அதிகளவில் வீடுகள் வந்து விட்டதால் இறந்தவர்கள் உடல்களை கூவம் ஆற்றை கடந்து மறுகரைக்கு சென்று எரித்தும், அடக்கம் செய்தும் வருகின்றனர். சில நேரங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்காக அம்பத்தூரில் உள்ள தகன மேடைக்கு எடுத்துச் சென்று வந்தனர்.
கூவம் ஆற்றில் தண்ணீர் இல்லாத நேரங்களில் இறந்தவர்களின் உடல்களை தோளில் சுமந்தபடி ஆற்றை கடந்து சென்று அக்கரையில் புதைத்து வந்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீர் சென்றால் இறந்தவர்களின் உடல்களை ஆற்றை கடந்து சென்று புதைக்க பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஆற்றை கடக்கும் போது சில நேரங்களில் ஆற்றில் இருக்கும் முட்செடிகள், விஷ பூச்சிகளால் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ? என அஞ்சுகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் பிரமிளா (வயது 35) என்ற பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கூவம் ஆற்றில் தற்போது இடுப்பளவுக்கு தண்ணீர் செல்வதால் அவரது உடலை அடக்கம் செய்ய மறுகரைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ரப்பர் படகு மூலம் பிரமிளா உடலை ஆற்றின் மறுகரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதுபோன்ற நேரங்களில் இறந்தவரின் உடலுடன் ஒருசிலர் மட்டும் அடக்கம் செய்ய மறுகரைக்கு செல்ல முடியும் நிலையும் உள்ளது. எனவே தமிழக அரசு தங்களுக்கு நிரந்தரமாக சுடுகாட்டுக்கான இடத்தை ஒதுக்கி தரவேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.