காகங்களை விஷம் வைத்து கொன்ற ஆசாமி
பொள்ளாச்சி அருகே காகங்களை விஷம் வைத்து கொன்ற ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே காகங்களை விஷம் வைத்து கொன்ற ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இறந்து கிடந்த காகங்கள்
பொள்ளாச்சி அருகே பெரியகவுண்டனூரில் உள்ள சில தோட்டங்களில் காகங்கள் இறந்து கிடந்தன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் அங்குள்ள தோட்டத்தில் இறந்து கிடந்த காகங்களின் உடல்களை ஒரு ஆசாமி சேகரித்து கொண்டு இருந்தார். அங்கு பொதுமக்கள் வருவதை பார்த்ததும் அவர் தப்பி சென்றார். உடனே விரட்டி சென்று சந்திராபுரத்தில் வைத்து அவரை பிடித்தனர். தொடர்ந்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மருந்து தயாரிக்க...
போலீ சார் நடத்திய விசாரணையில் அவர் குஜராத்தை சேர்ந்த சூர்யா என்பதும், சிஞ்சுவாடியில் வசித்து வருவதும், ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று சர்க்கஸ் நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் தனது மகனுக்கு வெள்ளை படை நோய் இருப்பதால், அதற்கு மருந்து தயாரிப்பதற்காக விஷம் கலந்த உணவை வீசி காகங்களை கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் காகங்களின் இறைச்சியை ஓட்டல்களுக்கு விற்பனை செய்து உள்ளாரா என்ற கோணத்திலும் அவரிடம், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காகங்கள் கொல்லப்பட்டு உள்ளன. காகங்களுக்கு வைக்கப்படும் விஷத்தை கோழிகள், மயில்கள் சாப்பிட்டு இறக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.