தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.
நல்லம்பள்ளி:
காலபைரவர் கோவில்
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி காலபைரவருக்கு 108 வகை நறுமணப்பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து சாமிக்கு 1,008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனையும் நடந்தது.
பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன் ராஜ அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் அவர்கள் கோவிலை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்குபிரசாதம் வழங்கப்பட்டது.
சத்ரு சம்ஹார யாகம்
இதை தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. 108 கிலோ மிளகு, 1008 கிலோ மிளகாய் கொண்டு நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாமி வலம் வந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.