ஆசிய கோப்பை அறிமுக விழா
ஆசிய கோப்பை அறிமுக விழா
தளி
உடுமலையில் ஆசிய ஆக்கி கோப்பை அறிமுக விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி கலந்து ெகாண்டனர்.
ஆசிய கோப்பை
ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் 7-வது ஆசிய கோப்பைக்கான ஆண்கள் ஆக்கி போட்டி வருகின்ற ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா நாடுகளை சேர்ந்த ஆக்கி அணிகள் களம் இறங்குகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் தோறும் எடுத்து சென்று பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த 20-ந் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்டங்கள் தோறும் ஆக்கி கோப்பை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு கோப்பை கொண்டு வரப்பட்டது. அமராவதி சைனிக் பள்ளி மாணவர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஆக்கி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கோப்பையை உற்சாகமாக வரவேற்றனர்.
அறிமுக விழா
இதையடுத்து ஆசிய கோப்பை அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கோப்பையை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து ஆக்கி வீரர்களுக்கு அமைச்சர்கள் மரக்கன்றுகளை வழங்கினார்கள்.