இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 25 April 2023 12:04 AM IST (Updated: 25 April 2023 12:36 AM IST)
t-max-icont-min-icon

உயர்நீதிமன்றம் உத்தரவின்படி இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை புதுவேட்டக்குடி கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி கிராம மக்கள் கையில் மனுக்களுடன் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் வகுப்பை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மனு அளித்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால் நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினோம்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி 12 வாரங்களுக்குள் உரிய பயனாளிகளை தேர்வு செய்து இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ஆதிதிராவிடர் காலனி அமைப்பு தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பித்து ஆணையிடப்பட்டது. எனவே உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி எங்கள் மனுவினை பரிசீலனை செய்து வீடற்ற, நிலமற்ற ஏழை ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் குடும்பங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி ஆதிதிராவிடர் காலனி அமைத்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து கிராம மக்களின் தனித்தனி மனுவினை மொத்தமாக வழங்கி விட்டு கலைந்து சென்றனர்.

மொத்தம் 276 மனுக்கள்

கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 276 மனுக்களை பெற்றார். மேலும் அவர் 77 பயனாளிகளுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story