திண்டுக்கல் உள்பட 4 இடங்களில் கருத்து கேட்பு


திண்டுக்கல் உள்பட 4 இடங்களில் கருத்து கேட்பு
x

புதிய கல்வி கொள்கை குறித்து, திண்டுக்கல் உள்பட 4 இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

கருத்து கேட்பு கூட்டம்

தமிழகம் முழுவதும் புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, வேடசந்தூர் ஆகிய 4 கல்வி மாவட்ட அளவில் தலா ஒரு இடத்தில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவிலான கருத்து கேட்பு கூட்டம், திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.

இதற்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வம் தலைமை தாங்கினார். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு புதிய கல்வி கொள்கை குறித்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். அப்போது காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கு பள்ளிகள் இருப்பது போன்று மனவளர்ச்சி குன்றியோருக்கும் அரசு பள்ளிகளை நடத்த வேண்டும்.

இதேபோல் மாணவர்கள் படித்து முடித்ததும் வேலைக்காக காத்திருக்காமல் சுயமாக தொழில் செய்யும் வகையில் பல்வேறு வகையான தொழிற்கல்வியை பாடத்தில் சேர்க்க வேண்டும். மேலும் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகள், நுழைவு தேர்வுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எளிதில் வெற்றிபெறும் வகையில் பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

வேடசந்தூர், பழனி

வேடசந்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்துக்கு, வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் கீதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய கல்வி கொள்கையை வகுப்பது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. இதில் கல்வியாளர்கள், தலைமை ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கினர்.

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு, பழனி கல்வி மாவட்ட அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். இதில் பழனி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தாய்மொழி வழி கல்வி, மூடநம்பிக்கை அற்ற அறிவியல் பூர்வமான கல்வி, அனைத்து பள்ளிகளிலும் நூலகம், விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, அரசு பள்ளியில் பயின்ற மாணவருக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது போன்ற கருத்துகளை தெரிவித்தனர்.


Next Story