குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டு கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து இன்று ஆலோசனை


குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டு  கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள்  வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 4:54 PM IST)
t-max-icont-min-icon

குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டு கோரிக்கை அட்டை அணிந்து தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்தனர். இதற்கிடையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டு கோரிக்கை அட்டை அணிந்து தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்தனர். இதற்கிடையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

தூய்மை பணியாளர்கள்

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் மூலம் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் நிரந்தர பணியாளர்கள் 70 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 260 பேரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் அரசாணை அடிப்படையில் கோவை மாவட்ட கலெக்டரின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணய சட்டப்படி தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் வினியோக பணியாளர்கள் உள்பட அனைத்து தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க கோரி பொள்ளாச்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். மேலும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு வழங்கும் வரை தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

ஆலோசனை

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் அரசாணை அடிப்படையில் கோவை மாவட்ட கலெக்டரின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணய சட்டப்படி தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் வினியோக பணியாளர்கள் உள்பட அனைத்து தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். அதன்படி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.606, பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.529 வழங்க வேண்டும். ஆனால் தற்போது ரூ.425 தான் வழங்கப்படுகிறது.

இந்த கோரிக்கை வலியுறுத்தி முதற்கட்டமாக கோரிக்கை அட்டை அணிந்து பொள்ளாச்சி நகராட்சி, கோட்டூர், கிணத்துக்கடவு, ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர், ஜமீன்ஊத்துக்குளி ஆகிய பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்தனர். அடுத்தக்கட்டமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்படுகிறது. மேலும் கலெக்டரின் உத்தரவுபடி குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் வரை தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story