கூடலூரில், சம்பள உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்


கூடலூரில், சம்பள உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
x

கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சம்பள உயர்வு கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

நீலகிரி

கூடலூர்: சம்பள உயர்வு கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம்

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு குறைந்த சம்பளம் வழங்குவதாகவும், அரசு நிர்ணயித்துள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், 10 தூய்மை பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்றுமுன்தினம் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

2-வது நாளாக

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சம்பள உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கு சம்பள உயர்வு கோரி கோஷங்கள் எழுப்பினர்.

தூய்மை பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளிலும் குப்பைக்கழிவுகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதேபோல் பொதுஇடங்களில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியும் நடைபெறாததால் சுகாதார சீர்கெடும் அபாயம் ஏற்பட்டது.

வாபஸ்

இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாலை 3.30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம், ஒப்பந்ததாரர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சமயத்தில் இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தினக்கூலி ரூ.450 வழங்குவதாகவும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக சம்பந்தப்பட்ட துறையிடம் வழங்குவதாக ஒப்பந்ததாரர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று மாலை 4 மணிக்கு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.


Related Tags :
Next Story