முக்காணியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்:1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
முக்காணியில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்காணியில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் நேற்று காலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் பிரச்சினை
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையிலுள்ள முக்காணி கிராம பஞ்சாயத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்தின் கீழ் முக்காணி, குருவித்துறை மற்றும் பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதியிலுள்ள கிராம மக்கள் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் பிரச்சினயால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் குழாயில் அவ்வப்போது வரும் தண்ணீரும் கலங்கலாக சுகாதாரமற்ற முறையில் வருவதாக, சம்மந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனுக்களை கொடுத்துள்ளனர்.
சாலைமறியல்
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதநிலையில், முக்காணி மெயின் ரோட்டின் கீழ் பகுதியில் உள்ள சில குடியிருப்புகளுக்கு சிறிதுநேரம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதேசமயம் மேடான பகுதியிலுள்ள பெரும்பாலான கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் ெசய்யப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் கிராம மக்கள் அருகிலுள்ள பகுதிக்கு சில கி.மீ. தூரம் நடந்து சென்று சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் குடிநீரை சேகரித்து வருகின்றனர். நெடுஞ்சாலையைகடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் போது பலர் விபத்துகளிலும் சிக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த முக்காணி பஞ்சாயத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலையில் பஞ்சாயத்து தலைவர் பேச்சுத்தாய் என்ற தனம் தலைமையில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழையகாயலில் இருந்து வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், ஏரல் தாசில்தார் கைலாசநாத சுவாமி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மகேஷ் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணும் வரைமறியலை கைவிட அவர்கள் மறுத்து விட்டனர். இதைதொடர்ந்து திருச்செந்தூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் சம்பவ பகுதிக்கு சென்று கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில், தற்காலிகமாக 4 நாட்களுக்கு மஞ்சள் நீர் காயலிலிருந்து சாகுபுரம் தொழிற்சாலைக்கு செல்லும் குடிநீர் குழாயிலிருந்து முக்காணி பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்குவது என்றும், தொடர்ந்து வாழவல்லான் தடுப்பணையிலுள்ள நீரேற்று நிலையத்திலிருந்து முக்காணி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இதை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் காலை 9.30 மணியிலிருந்து காலை 11 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.