ஓய்வூதிய பலன்களை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா


ஓய்வூதிய பலன்களை கேட்டு  கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:46 PM GMT)

தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதிய பலன்களை கேட்டு ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

பா.ஜ.க. மனு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

இதில், பா.ஜ.க. தேனி நகர தலைவர் மதிவாணன், மாவட்ட இளைஞரணி தலைவர் அஜித் இளங்கோ ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "தேனி அல்லிநகரம் நகராட்சியில் நில அளவையராக ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார். தற்போது மக்கள் தொகை மற்றும் சுற்றுப்புற தொழில் வளர்ச்சி, குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிகரிப்பின் காரணமாக பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மற்றும் அனைத்து அளவை வேலைகளிலும் நீண்ட கால தாமதம் ஏற்படுகிறது. எனவே கூடுதல் நில அளவையரை நியமனம் செய்ய வேண்டும். கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம்

கண்டமனூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "கண்டமனூரில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க அதிக பணம் வசூலிக்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

பெரியகுளம் புதிய பஸ் நிலையம் எதிரே புதிதாக திறக்கப்பட்ட தனியார் மதுபான பாரை நிரந்தரமாக மூடக்கோரி, பெரியகுளம் நவாப் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

அதுபோல், பழங்குடியின மக்களுக்கான வீடு, வாழ்வாதார உதவிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு பழங்குடி மக்கள் இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கரந்தன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

தர்ணா

ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரம் ஊராட்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் தங்கவேல், சின்னவேலுச்சாமி, லட்சுமி ஆகிய 3 பேரும் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டம் செய்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், தர்ணா செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஓய்வு பெற்ற தங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்காமல் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தர்ணா செய்ததாக அவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் தங்களின் கோரிக்கை மனுவை அவரிடம் கொடுத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story