இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Jun 2023 2:38 AM IST (Updated: 6 Jun 2023 7:21 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூரில் இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தடுப்பு சுவர் அமைப்பு

அந்தியூர் பவானி ரோட்டில் சாலை விரிவாக்கம் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. ரோட்டின் இருபுறங்களிலும் கால்வாய்கள் அமைக்கப்படுவதுடன், ரோட்டின் நடுவே தடுப்பு சுவரும் கட்டப்பட்டு வருகிறது. அந்தியூர் ஸ்டேட் வங்கியில் இருந்து அண்ணாமடுவு பகுதி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டின் நடுவே இந்த தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இடைவெளி விடாமல் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை 9.30 மணி அளவில் அந்தியூர்- பவானி ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும், இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் எனக்கோரி திடீரென ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கூடுதல் உட்கோட்ட ஈரோடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பிரபாகரன், அந்தியூர் உதவி பொறியாளர் சதாசிவம், அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

அப்போது அதிகாரிகளிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'அந்தியூர்- பவானி ரோட்டில் தடுப்பு சுவர் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் உரிய இடைவெளி விடாமல் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் நீண்ட தூரம் சென்று சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே உரிய இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்,' என்றனர். அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், 'பொதுமக்களுக்கு இடையூறு இ்ல்லாமல் உள்ள இடங்களை கண்டுபிடித்து, அந்த இடங்களில் உள்ள தடுப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அந்தியூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story