இடைத்தரகர்களை தடுத்த பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்; 2 பேர் கைது
இடைத்தரகர்களை தடுத்த பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாக்கினர்
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் இலவச தரிசனத்திற்காகவும், ரூ.100 சிறப்பு டிக்கெட் எடுத்தும் அம்மனை தரிசனம் செய்ய வரிசையில் சென்றனர். இந்நிலையில், கோவிலை சுற்றித்திரிந்த இடைத்தரகர்கள் சிலர், பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பின்வாசல் வழியாக கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரி ஆறுமுகம், அவர்களை தடுத்து நிறுத்தினார். இதனால், இடைத்தரகர்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆறுமுகத்தை தாக்கினர். இதைப் பார்த்த மற்ற காவலர்கள், அவர்களிடமிருந்து ஆறுமுகத்தை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஆறுமுகத்தின் சட்டை கிழிந்தது.
2 பேர் கைது
இதைத்தொடர்ந்து அவர் நெஞ்சுவலி காரணமாக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இடைத்தரகர்களை நம்பி வந்த பக்தர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உத்தரவின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரி ஆறுமுகத்தை தாக்கியதாக மாகாளிகுடியைச் சேர்ந்த தணிகைவேல்(வயது 44), சின்னையனின் மகன் சந்தோஷ்(23) ஆகியோரை பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூறுகையில், அம்மனை தரிசனம் செய்வதற்காக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று உள்ளே செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பணம் கொடுத்தால் போதும், அம்மனை எளிதில் தரிசனம் செய்யலாம் என்ற இடைத்தரகர்களின் செயல், பக்தர்களுக்கு வேதனையை அளிக்கிறது. இதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.