கட்டிடத் தொழிலாளி மீது தாக்குதல்


தூத்துக்குடி அருகே கட்டிடத் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள வீரநாயக்கன் தட்டை சேர்ந்த செந்தில்குமார் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவரது தாயார் சித்திரைக்கனி கடந்த மாதம் 30-ந் தேதி அங்குள்ள சந்தன மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழாவிற்கு சென்று கொண்டிருந்தபோது, பூமாரி என்பவர் அவரை கேலி, கிண்டல் செய்தாராம்.

இதை அறிந்த செந்தில்குமார் பூமாரியின் சகோதரி மாரியம்மாளிடம் இது குறித்து கேட்டுள்ளார். இதை அவர் கண்டுகொள்ளாமல் இருந்தாராம். அன்று இரவில் செந்தில்குமார் வீரநாயக்கன்தட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த சிவசங்கு மகன் தங்கமுத்து மற்றும் மாரியம்மாள் ஆகிய 2 பேரும் செந்தில்குமாரை அவதூறாக பேசி, கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் காயம் அடைந்த செந்தில்குமார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story