டிரைவர் மீது தாக்குதல்; 3 வாலிபர்கள் கைது
கோவில்பட்டியில் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் மகன் கற்பகமூர்த்தி (வயது 26). இவர் சென்னையில் கார் டிரைவராக உள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவில்பட்டிக்கு வந்த இவர், நேற்று முன்தினம் முத்துநகரில் உள்ள அத்தை வீட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றார்.
இந்த நிலையில் கற்பகமூர்த்தி அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவில் மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில் இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே உறவினர்கள் அங்கு சென்று அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கற்பகமூர்த்தியின் தந்தை சுரேஷ்குமார் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பாரதிநகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த விக்னேஷ் (21), முத்துராஜ் (21), சக்திவேல் (21) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.