சம்பளம் கேட்ட ஊழியர் மீது தாக்குதல்
கோவையில் சம்பளம் கேட்ட ஊழியர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை மசக்களிபாளையம், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). இவர் பீளமேடு பாரதி நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அருண்குமார் வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த நிறுவனத்தினர் அருண்குமாரை பணியில் இருந்து நீக்கி விட்டனர். இதையடுத்து அருண்குமார் தனக்கு 7 நாட்களுக்கான சம்பளம் தர வேண்டியது உள்ளது. அதனை உடனடியாக தரும்படி தனியார் நிறுவன உரிமையாளர் சிவக்குமாரை (51) போனில் தொடர்பு கொண்டு கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அருண்குமார் தான் பணிபுரிந்த நிறுவனத்திற்கு சென்று சம்பள பாக்கியை தரும்படி கேட்டார். அப்போது சிவக்குமாருக்கும், அருண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார் உள்பட 3 பேர் அருண்குமாரை தாக்கியதாக தெரிகிறது. பதிலுக்கு அருண்குமார் அந்த நிறுவனத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியாக தெரிகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் நிறுவன உரிமையாளர் சிவக்குமார் உள்பட 3 பேர் மீதும் மற்றும் அருண்குமார் மீதும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.