பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்
குடும்ப தகராறில் மோதலில் பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாரமங்கலம்:-
தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் பூமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). இவர் ,தாரமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த வேலு என்பவரின் மகள் கலையரசி (29) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாள்.
இந்தநிலையில் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். கலையரசி வெளி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கலையரசி குரூப்-1 தேர்வு எழுத பயிற்சி பெற்று வந்துள்ளார்.
நேற்று தனது தாயார் மற்றும் சகோதரியுடன் நாகராஜ் வீட்டிற்கு சென்று தான் படித்து வந்த புத்தகம் தங்கள் வீட்டில் இருப்பதை எடுத்து செல்ல வந்திருப்பதாக கூறியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த நாகராஜ், அவருடைய அண்ணன், தாயார் ஆகியோர் தகராறு செய்து கலையரசியை அடித்து உதைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், நாகராஜ், பூபதி, அழகம்மாள், கலையரசி, தேவி, தனலட்சுமி ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.