இளம்பெண்ணின் வீட்டு கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்

இளம்பெண்ணின் வீட்டு கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்
அன்னூர்
அன்னூர் அருகே இளம்பெண்ணின் வீட்டு கதவை தட்டியதாக கூறி வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அவமானமடைந்த அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிறுவன ஊழியர்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பாரதி கணேஷ் (வயது 29). இவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதற்காக அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தனது நண்பருடன் தங்கியிருந்தார். பாரதி கணேஷ் வசித்து வந்த வீட்டின் கீழ் பகுதியில் இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது யாரோ கதவை தட்டியது போன்ற சத்தம் கேட்டு உள்ளது. இதனால் அச்சத்துடன் அந்த பெண் கதவை திறந்து பார்த்தார். ஆனால் வெளியே யாரும் இல்லை.
தாக்குதல்
இதையடுத்து அந்த இளம்பெண், தனது குடும்பத்தினர் திரும்பி வந்ததும், யாரோ வீட்டு கதவை தட்டியது போன்று சத்தம் கேட்டது என்றும், கதவை திறந்து பார்த்தால் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு வீட்டின் மேல் மாடியில் வசிக்கும் பாரதி கணேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் பாரதி கணேசின் மோட்டார் சைக்கிளை எடுத்து வீட்டின் உள்ளே வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வெளியே செல்வதற்காக வந்த பாரதி கணேஷ் தனது மோட்டார் சைக்கிளை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து தேடி பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டார். அப்போது பாரதி கணேஷ்க்கும், அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் வாலிபரை சராமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
அவமானத்தில் தற்கொலை
இதில் காயமடைந்த அந்த வாலிபர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வீடு திரும்பிய அவர் நேற்று அதிகாலை வீட்டு மாடிப்படி அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் விரைந்து சென்று பாரதி கணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உறவினர்கள் நேற்று அன்னூர் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்கள் இளம்பெண்ணின் குடும்பத்தினர் தாக்கியதால்தான் அவமானம் தாங்க முடியாமல் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், அவரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
விசாரணை
இதையடுத்து ஏற்கனவே பாரதிகணேஷ் அளித்த புகாரின் பேரில் அந்த இளம்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






