பெண் மீது தாக்குதல்; வாலிபர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் உள்பட 13 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் உள்பட 13 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்விரோதம்
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுமத்ரா, இவரது கணவர் ரவி, மணலி ஊராட்சியில் சாத்தங்குடியைச் சேர்ந்த செம்மலர் (வயது 42) என்பவர் தற்காலிகமாக பணித்தள பொறுப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டார். செம்மலர் மணலி கடை தெருவில் ஒரு தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
பணியில் இருந்து நீக்கியதால் ஊராட்சி மன்ற தலைவர் சுமத்ரா, அவருடைய கணவர் ரவி ஆகியோருக்கும், செம்மலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரு தரப்பினரும் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் தங்களை பற்றி தவறாக விமர்சனம் செய்ததாக புகார் தெரிவித்தனர்.
பெண் மீது தாக்குதல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 10-க்கும் மேற்பட்டவர்கள் செம்மலர் கடைக்கு சென்று அவரை தாக்கி சாலையில் இழுத்து போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
13 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து செம்மலர் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் சுமத்ரா, அவருடைய கணவர் ரவி உள்பட 14 பேர் மீது திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரை சேர்ந்த குணசீலன் (வயது32) என்பவரை கைது செய்தனர்.மேலும் இதுதொடர்புடைய 13 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.