ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது
தடையில்லா சான்று பெறுவதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
தடையில்லா சான்று பெறுவதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
லஞ்சம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் வேங்கை செல்வபிரபு. இவர் தனது நிலத்தை வீட்டு மனையாக மாற்ற திட்டமிட்டார். இதற்காக நகர ஊரமைப்பு இயக்கக ஒப்புதல் பெறுவதற்கு தடையில்லா சான்று கேட்டு பொள்ளாச்சி- உடுமலை ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அங்கு பணியாற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த உதவி பொறியாளர் செந்தில்வேல் (வயது 30) என்பவர் தடையில்லா சான்று கொடுக்க ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து வேங்கை செல்வபிரபு கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
உதவி பொறியாளர் கைது
அவர்கள் கூறிய அறிவுரையின் பேரில், வேங்கை செல்வ பிரபு, ரசாயன பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை உதவி பொறியாளர் செந்தில்குமாரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் செந்தில்குமாரை கையும், களவுமாக பிடித்தனர்.
இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லதா, பரிமளம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மாலை 5 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 10 மணி வரை நீடித்தது. உதவி பொறியாளர் கைதான சம்பவம் காரணமாக பொதுப்பணித்துறை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
---