உதவி ஜெயிலர் பணி தேர்வில் குளறுபடி என வழக்கு: நடந்து முடிந்த தேர்வுக்கான விடைகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? மதுரை ஐகோர்ட்டு கேள்வி


உதவி ஜெயிலர் பணி தேர்வில் குளறுபடி என வழக்கு: நடந்து முடிந்த தேர்வுக்கான விடைகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்?  மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 12 Oct 2023 8:30 PM GMT (Updated: 12 Oct 2023 8:30 PM GMT)

நடந்து முடிந்த உதவி ஜெயிலர் பணித்தேர்வுக்கான விடைகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை

தேர்வில் குளறுபடி

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அசோக்குமார் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "சிறைத்துறையில் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடந்தபோது, கேள்விக்கான பதிலை பதிவு செய்ததில் வேறொரு பதில் பதிவானது. இது தொடர்பாக தேர்வு மையத்தின் கண்காணிப்பாளரிடம் கேட்ேடன். சரியாகத்தான் உள்ளது என பதிலளித்தார். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. அப்போது, எதிர்பார்த்த மதிப்பெண்களைவிட மிக குறைவாக இருந்தது. எனவே விடைத்தாள் (கீ ஆன்சர்) கேட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்துக்கு விண்ணப்பித்தும் எந்த பதிலும் இல்லை. டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் இது போன்ற குளறுபடி உள்ளது.

போட்டித்தேர்வுக்கான நடைமுறைகளை பின்பற்றி தேர்வாளர்களுக்கு விடைகளை தரும் நடைமுறையை டி.என்.பி.எஸ்.சி. பின்பற்ற வேண்டும். எனவே, கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்பட்ட தேர்வின் விடைத்தாளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட வேண்டும். எங்களின் விடைகளை ஆய்வு செய்யவும், அதுவரை எங்களுக்கான பணியிடங்களை காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தயக்கம் ஏன்?

இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வுக்கான விதிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அதில், தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னரே இறுதி விடைத்தாள் வெளியிடப்படும். அடுத்த மாதம் 15-ந் தேதி காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, "இறுதி விடைத்தாளை வெளியிடுவதில் என்ன விதிகளை கடைபிடிக்க உள்ளனர் என்று தெரியவில்லை. நடந்து முடிந்த தேர்வுக்கான விடைகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? இதில் என்ன பிரச்சினை ஏற்பட போகிறது?" என்று கேள்விகள் எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story