தாய், தம்பியுடன் உதவி பேராசிரியை பிச்சை எடுக்கும் போராட்டம்


தாய், தம்பியுடன் உதவி பேராசிரியை பிச்சை எடுக்கும் போராட்டம்
x

விருத்தாசலத்தில் கொள்ளை போன 110 பவுன் நகையை மீட்டு தரக்கோரி தாய், தம்பியுடன் உதவி பேராசிரியை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை 6-வது தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி தனலட்சுமி(60). இவர்களுக்கு சுதா, ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகிய 3 மகள்களும், விக்னேஷ்(27) என்ற மகனும் உள்ளனர். இதில் ஜெயலட்சுமி மற்றும் விக்னேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

ஜெயலட்சுமி காரைக்காலில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சின்னதுரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார்.

110 பவுன் நகை கொள்ளை

இந்த நிலையில் தனலட்சுமி, தனது மகள் ஜெயலட்சுமியின் திருமணத்துக்காக வைத்திருந்த 110 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கடந்த மார்ச் மாதம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை குற்றவாளியை கைது செய்யவில்லை. கொள்ளைபோன நகையை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

பிச்சை எடுக்கும் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, தனது தாய் தனலட்சுமி, தம்பி விக்னேசுடன் புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இன்று திடீரென பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கொள்ளை போன நகையை போலீசார் மீட்டு தர வேண்டும் என்ற பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர்.

இது குறித்து தனலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், நகை-பணம் கொள்ளை போனதால் எனது மகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்க முடியவில்லை. நகை-பணத்தை மீட்டுதரக்கோரி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்திலும் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று மனவேதனையுடன் கண்ணீர்விட்டு கதறினார்.

பேச்சுவார்த்தை

இது பற்றி அறிந்ததும் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story