மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; ஜோதிடர் சாவு


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; ஜோதிடர் சாவு
x

ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஜோதிடர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சிவக்குமார் (வயது 32). ஜோதிடர். இவர் நேற்று முன் தினம் வீட்டிலிருந்து அவரது தாயார் பாக்கியத்தை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ராசிபுரம் அருகே உள்ள பாச்சலுக்கு சென்றார். அங்கு அவரது தாயாரை விட்டுவிட்டு நேற்று முன்தினம் இரவு மங்களபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ராசிபுரத்தில் இருந்து திரும்பி சென்று கொண்டிருந்தார்.

நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலா பக்கமுள்ள செல்லியம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து எதிரே வந்த லாரி சிவக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஜோதிடர் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த ஆயில்பட்டி போலீசார் சிவக்குமாரின் உடலை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்த வந்த சிவக்குமாரின் உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. மேலும் இந்த விபத்து குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் இறந்த சிவக்குமாருக்கு நந்தினி (25) என்ற மனைவியும் ருத்ரா, ஸ்ரீ சுபா என்ற 2 மகள்களும் உள்ளனர். இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story