ஆனைக்கல்பாளையத்தில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி

ஆனைக்கல்பாளையத்தில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனா்.
சோலார்
ஈரோடு புறவழிச்சாலை பகுதியான ஆனைக்கல்பாளையம், 46 புதூர் பிரிவு சாலை, முத்துக்கவுண்டன்பாளையம் ரிங் ரோடு, பரிசல் துறை நால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த வழிகளில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பயமின்றி பயணித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புறவழிச் சாலை பகுதியில் உள்ள அனைத்து வேகத்தடையும் திடீரென பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்பட்டது. வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் வேகமாக சென்றன. இதனால் சாலைகளை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் புறவழிச்சாலை பகுதியில் உள்ள ரோட்டில் வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஆனைக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு பொதுமக்கள் வந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ., மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பொதுமக்களிடம் கூறுகையில், 'புறவழிச்சாலை பகுதியில் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள், தங்களுடைய சாலை மறியல் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






