சென்னிமலை முருகன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
சென்னிமலை முருகன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சென்னிமலை முருகன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கொடிமரம்
சென்னிமலை முருகன் கோவிலில் மூலவர் சன்னதிக்கு முன்புறம் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கொடி மரம் இருந்தது. இதில் தான் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர நாட்களில் சேவல் கொடி ஏற்றி வைத்து விழாவை தொடங்குவது வழக்கம். இந்த கொடிமரம் பழுதானதால் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது சுமார் 36 அடி உயரம் கொண்ட புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த கொடி மரத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னிமலை முருகன் கோவில் பணியாளர்கள் ஆய்வு செய்த போது கொடி மரத்தின் ஒரு பகுதி மிகவும் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்ததை பார்த்தனர். உடனே அந்த கொடிமரம் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அகற்றப்பட்டது.
பிரதிஷ்டை
இதனைத்தொடர்ந்து புதிதாக வேறு கொடிமரம் அமைக்க கட்டளைதாரர்கள் மூலம் முடிவு செய்யப்பட்டு புதிய கொடிமரம் உருவாக்கப்பட்டது. இதை பிரதிஷ்டை செய்யும் விழா சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று நடைபெற்றது. அப்போது கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். அதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு அலுவலரான ஆர்.மேனகா முன்னிலையில் ஆகம விதிப்படி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.செங்கோட்டையன், நகை மதிப்பீட்டு அலுவலர் ஜீவானந்தம், கோவில் ஆய்வாளர் ஆர்.ரவிக்குமார், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் மற்றும் திரளான பக்தர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.