சென்னிமலையில், கொடிகாத்த குமரனுக்கு ரூ.3 கோடியில் உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
சென்னிமலையில் கொடிகாத்த குமரனுக்கு ரூ.3 கோடியில் உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்து உள்ளார்.
சென்னிமலை
சென்னிமலையில் கொடிகாத்த குமரனுக்கு ரூ.3 கோடியில் உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்து உள்ளார்.
சமுதாய வளைகாப்பு விழா
சென்னிமலை காமராஜ் நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். அ.கணேசமூர்த்தி எம்.பி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சி.பிரபு, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு 70 கர்ப்பிணிகளுக்கு 5 வகை உணவுகளுடன் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.1,000 பணம் மற்றும் வேட்டி, சேலைகளையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-
ரூ.3 கோடி
கொடிகாத்த குமரனின் பெருமையை இன்றைய தலைமுறையினர் அறியும் வகையில் சென்னிமலையில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பன்னீர்செல்வம், பேரூராட்சி துணைத்தலைவர் சவுந்தர்ராஜன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பூங்கோதை, சென்னிமலை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆனந்தி, தி.மு.க. நகர செயலாளர் எஸ்.எம்.ராமசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கொடுமணல் கோபால், சதீஷ் என்கிற பி.சுப்பிரமணியம், கரட்டுப்பாளையம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.